2 அல் பகறா

Friday, August 19, 2011

பெயர்: இந்த அத்தியாயத்தின் ஓரிடத்தில் பசுவைப் பற்றி கூறப்பட்டிருப்பதால் இதற்கு 'அல்பகறா' - பசு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. குர்ஆனின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் பரந்து விரிந்த கருத்துக்கள் விவரிக்கப்ட்டுள்ளன. எனவே அத்தியாயங்களுக்கு அவற்றின் பரந்த கருத்துக்களுக்கேற்ப ஒருங்கிணைந்த தலைப்புகளை அளித்திட முடியாது. இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள், இறைவனின் வழிகாட்டலின்படி குர்ஆனின் பெரும்பாலான அத்தியாயங்களுக்குத் 'தலைப்புகளை' இடுவதற்குப் பதில் 'பெயர்களையே' சூட்டியுள்ளார்கள். அப்பெயர்கள் அந்தந்த அத்தியாயங்களின் அடையாளங்களாய் மட்டும் பயன்படுகின்றன. எனவே இந்த அத்தியாயத்திற்கு 'அல்பகறா' என்று பெயர் சூட்டியிருப்பதன் நோக்கம், இதில் பசுவை;ப் பற்றி விவாதிக்கபடுகின்றது என்கதற்காக அன்று, இதில் பசுவைப் பற்றிக் குறிப்படப்பட்டுள்ளது என்பதற்காகவே!

இறக்கியருளப்பட்ட காலம்: இந்த அத்தியாத்தின் பெரும்பகுதி நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து, மதீனா வாழ்க்கையைத் தொடங்கிய உடனேயே இறக்கியருளப்பட்டதாகும். ஒரு சிறு பகுதி மட்டுமே, பிறகு இறங்கியது! இந்தப் பகுதி கருத்துப் பொருத்தத்தைக் கவனித்துப் பெரும் பகுதியுடன் இணைக்கப்பட்டது.

இறங்கிய சூழ்நிலையும் வரலாற்றுப் பின்னணியும்: இந்த அத்தியாயத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முதலில் அது இறங்கிய வரலாற்றுப் பின்னணியை நன்கு புரிந்தாக வேண்டும்.

1. ஹிஜ்ரத்துக்கு முன்பு (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவிற்குச் செல்வதற்கு முன்பு) மக்கா நகரில் இஸ்லாமிய அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. அப்போது அரபிகளில் இறைவனுக்கு இணைவைப்பவர்களை நோக்கியே பெரும்பாலும் அந்த அழைப்பு விடுவிக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் அவர்களுக்கு இஸ்லாத்தின் இந்த அழைப்பு முன்பின் அறிமுகமில்லாத ஒரு புதிய அழைப்பாய் இருந்தது. இப்போது ஹிஜ்ரத்திற்குப் பிறகு யூதர்களைச் சந்திக்க நேரிட்டது. இவர்களோ ஏகத்துவம், தூதுத்துவம், வஹி (இறைச்செய்தி), மறுமை மற்றும் வானவர்கள் ஆகிய அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். மேலும், அடிப்படையில் அவர்களது மார்க்கம், முஹம்மத் (ஸல்) அவர்கள் போதித்துக் கொண்டிருந்த இஸ்லாம் எனும் மார்க்கமாகத்தான் இருந்தது! ஆயினும் பல நூற்றாண்டுகளாய் அவர்களிடம் தொடர்ந்து வந்த கொள்கை வீழ்ச்சி, அவர்களின் அசல் மார்க்கத்திலிருந்து அவர்களை வெகுதூரம் விலக்கி வைத்திருந்தது! நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றவுடன் யூதர்களை அவர்களுடைய அசல் மார்க்கத்தின் பக்கம் அழைக்கும்படி அண்ணலார் அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். எனவேதான் அல்பகறா அத்தியாயத்தின் 141 -ஆவது வசனம் வரை இடம் பெற்றிருக்கும் அழைப்பு, மேற்சொன்ன தன்மை உடையதாய் உள்ளது.

2. மதீனா சென்றவுடன் இஸ்லாமிய அழைப்புப் பணி ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. மக்கா நகரில் மார்க்கத்தின் அடிப்படைகளைப் பிரச்சாரம் செய்தல், மற்றும் தீனை - இறைநெறியை ஏற்றுக் கொண்டோர்க்கு ஒழுக்கப் பயிற்சியளித்தல் ஆகிய பணிகள் மட்டுமே நடைபெற்று வந்தன. ஆனால் ஹிஜ்ரத்திற்குப் பிறகு மதீனா நகரில் சிறியதோர் இஸ்லாமிய அரசுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு, அது துளிர்விட ஆரம்பித்தவுடன் சமூகம், நாகரிகம், பொருளாதாரம், சட்டம் மற்றும் அரசியல் தொடர்பான அடிப்படை அறிவுரைகளை அல்லாஹ் அளிக்கத் தொடங்கினான். இஸ்லாத்திpன் இந்த புதிய வாழ்க்கையமைப்பு எவ்விதம் நிறுவப்பட வேண்டும் என்பதையும் விளக்கிக் கொடுத்தான். இந்த அறிவுரைகளே இடம் பெற்றுள்ளன.

3.  ஹிஜ்ரத்திற்கு முன்பு வரை இறைமறுப்பின் கோட்டையிலேயே (தாருல் குஃப்ர்) இஸ்லாத்தின் அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. மேலும் பல்வேறு கோத்திரங்களிலிருந்து இஸ்லத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தத்தம் இருப்பிடங்களில் இருந்தவண்ணமே தாங்கள் ஏற்றுக்கொண்ட நெறியின்பால் அழைப்பு விடுப்பதில் ஈடுபட்டு வந்தனர். அதன் விளைவாய்ப் பல சோதனைகளுக்கும், கொடுமைகளுக்கும் அவர்கள் ஆளாக்கப்பட்டார்கள். ஆனால் ஹிஜ்ரத்திற்குப் பின்பு, சிதறிக் கிடந்த இந்த முஸ்லிம்கள் மதீனா நகரில் ஒன்று கூடி ஒரு குழுவினராய் உருவெடுத்துச் சிறியதொரு சுதந்திர அரசை நிறுவிக்கொண்டபோது நிலைமை இப்படி மாறிவிட்டது, ஒரு புறம் சிறியதோர் ஊர், மறுபுறம் அதனை வேரறுப்பதற்காகக் கச்சைக் கட்டிக்கொண்டு நிற்கும் முழு அரபுலகம்! இந்தச் சின்னஞ்சிறு குழு வெற்றி பெறுவதற்கும், தான் அழிந்துவிடாமல் நிலைத்து நிற்பதற்கும் பின்வரும் செயல்களையே செய்ய வேண்டியிருந்தது.

    அ. அவர்கள் முழு மூச்சுடன் உத்வேகத்துடனும் அந்த நெறியை பிரச்சாரம் செய்து முடிந்தவரை அதிகமான மக்களைத் தமது கொள்கையில் இணைத்துக் கொள்ள முயல்வது.

    ஆ. தம்மை எதிரப்பவர்கள் அசத்தியவாதிகள் என்பதை அறிவுள்ள எந்த மனிதனும் ஐயம் கொள்ள முடியாதவாறு வலுவான ஆதாரங்களைக் காண்பித்து நிரூபிப்பது.

    இ. நாற்புறங்களிலிருந்தும் தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்துகளைக் கண்டு அவர்கள் அஞ்சிவிடாமல், மிகுந்த பொறுமையுடனும் உறுதியுடனும் அவற்றைச் சந்திப்பது, எதிர்த்துப் போராடுவது.

    ஈ. அவர்களின் அழைப்புப் பணியைப் பரவ விடாமல் தடுப்பதற்காக எந்தச் சக்தியாவது ஆயுதத் தாக்குதல் நடத்துமாயின், அவர்களும் ஆயுதமேந்தி தீரத்துடன் எதிர்ததாக்குதல் நடத்தத் தயாராய் இருப்பது.

    உ. இஸ்லாம் விரும்புகின்ற இந்தப் புதிய அமைப்பை நன்கு புரியும்படி விளக்கிச் சொன்ன பின்பும் அழிவு வேலைகளில் இறங்கும் அவர்களின் அறியாமைக்கால சீர்கெட்ட வாழ்க்கையமைப்பை வலிமை கொண்டு அழித்தொழிப்பதற்கும் தயங்கக்கூடாது என்று முஸ்லிம்களுக்குத் துணிவூட்டுவது!

அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் இந்த ஐந்து விஷயங்களைப் பற்றி ஆரம்ப அறிவுரைகளை நல்கியுள்ளான்.

4. இஸ்லாமிய அழைப்புப் பணியின் இந்தக் காலக்கட்டத்தில் புதிய கூட்டமொன்று தலைதூக்கத் தொடங்கியிருந்தது. அதுவே நயவஞ்சகர்களின் கூட்டம். நயவஞ்சகத்தின் ஆரம்ப அறிகுறிகள் மக்கா வாழ்க்கையின் இறுதிக்காலத்திலேயே தென்படத் தொடங்கி விட்டாலும் மக்காவில் ஒரு வகை நயவஞ்சகர்களே காணப்பட்டார்கள். அவர்கள் இஸ்லாம் சத்தியமானது என ஏற்றுக்கொண்டிருந்தார்கள். தமது ஈமானை - இறைநம்பிக்கையை வாயினால் சொல்லியும் வந்தார்கள். எனினும் இஸ்லாத்திற்காக எந்தவித தியாகமும் செய்திட அவர்கள் தயாராக இருக்கவில்லை. ஆனால் மதீனா வந்த போது இவர்களைத் தவிர வேறு வகையான சில நயவஞ்சகர்களும் இஸ்லாமியக் குழுவில் காணப்படலாயினர். எனவே அவர்களைக் குறித்தும் அறிவுரைகள் தருவது அவசியமாயிற்று. அல் பகறா அத்தியாயம் இறங்கிய காலக் கட்டத்தில் இத்தகைய பல வகையான நயவஞ்சகர்கள் அப்போது தான் தலைதூக்கத் தொடங்கியிருந்தார்கள். எனவே அந்நயவஞ்சகர்களைப் பற்றி இறைவன் இங்கு சுருக்கமாகச் சுட்டிக் காண்பித்திருக்கின்றான். காலப்போக்கில் இந்த நயவஞ்சகர்களின் தீய குணங்களும் செயல்களும் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே வந்தனவோ அதற்கேற்பவே பின்னால் இறங்கிய அத்தியாயங்களில் எல்லாவகையான நயவஞ்சகர்கர்களைப் பற்றியும் அவரவரின் தன்மைகளுக்கேற்பத் தனித்தனி அறிவுரைகள் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment