8 அல் அன்ஃபால்

Monday, September 5, 2011

 அருளப்பட்ட காலம்:-
இந்த அத்தியாயம் ஹிஜ்ரி 2ஆம் ஆண்டில் பத்ருப் போருக்குப் பின்னர் இறங்கியதாகும். இஸ்லாத்திற்கும் இறைமறுப்பிற்கும் இடையே நடைபெற்ற முதல் போராகிய பத்ருப் போர் குறித்து இதில் விரிவாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணி:-
இந்த அத்தியாயத்தை ஆராய்வதற்கு முன் பத்ருப் போர் குறித்தும், அது தொடர்பான இதர நிலைகள் குறித்தும் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் செலுத்துவது அவசியமாகும்.

நபி (ஸல்) அவர்களின் சத்திய அழைப்பு (மக்கா வாழ்க்கையின் இறுதிக் கட்டம் வரை) தனது உறுதியையும், வலிமையையும் இவ்விதம் நிலைநாட்டியிருந்தது: அதாவது, இந்த இயக்கம் ஒரு புறம் உயர்ந்த நடத்தையும், பெருந்தன்மையும், கூர்ந்த அறிவாற்றலும் மிகுந்த தலைவரைத் தன் பக்கபலமாகக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த அழைப்பை வெற்றிச் சிகரம் வரை எட்டச் செய்தே தீருவது என்ற உறுதியான நாட்டத்தை அத்தலைவர் கொண்டுள்ளார் என்பதை அவர் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் தெளிவாக்கி விட்டிருந்தன. மற்றொரு பறம், இந்த அழைப்பு மனித உள்ளங்களையும் சிந்தனையையும் ஊடுருவிச் செல்லும் அளவுக்குத் தன்னுள் ஈர்ப்பாற்றலைப் பெற்றிருந்தது. எனினும், ஒருசில குறைபாடுகள் அந்த இயக்கத்தில் காணப்பட்டன. முதலாவதாக, இந்த அழைப்பிற்காக தன்னுடைய பொருள் அனைத்தையும் தியாகம் செய்வதற்கும், உலகம் முழுவதையும் எதிர்த்துப் போரிடுவதற்கும், தன்னுடைய நெருங்கிய உறவினர்களின் உறவைக் கூட அறுத்தெறிவதற்கும் தயாராகக் கூடிய மக்கள் போதிய அளவு இந்த இயக்கத்தில் சேர்ந்து விட்டார்கள் என்பது இன்னும் முழுமையாக நிரூபணமாகவில்லை. இரண்டாவதாக, இந்த சத்திய அழைப்பின் முழக்கம் நாடு முழுவதும் எட்டியிருந்தாலும் அதன் தாக்கங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. நன்கு அப்பிப்பிடித்துக் கொண்டிருந்த பழைய அஞ்ஞானகால அமைப்பைத் தீர்க்கமாக எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான கூட்டு வலிமை அப்போது அந்த அழைப்புப் பணியைச் செய்து கொண்டிருந்தோருக்குக் கிட்டியிருக்கவில்லை.

மூன்றாவதாக, இந்த சத்திய அழைப்பு நன்கு காலூன்றி நின்று தன்னுடைய நிலையை உறுதிப்படுத்தவும், தொடர்ந்து முன்னேறிச் செல்லவும் கூடிய வகையில் நாட்டின் எப்பகுதியும் பொருத்தமாக இருக்கவில்லை.

நான்காவதாக, இதுவரை நடைமுறை வாழ்வின் விவகாரங்களைத் தன் பொறுப்பில் ஏற்று நடத்தும் வாய்ப்பு அந்த சத்திய அழைப்பிற்குக் கிட்டவில்லை. எனவே, இந்த அழைப்பு வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், எந்த ஒழுக்க நெறிகளை நிலை நாட்டவும், நடைமுறைப்படுத்தவும் நாடியதோ அந்த ஒழுக்க நெறிகளை நிலை முழுமையாய் வெளிப்படுத்த முடியாத நிலை இருந்தது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இந்த நான்கு குறைகளையும நிறைவுபடுத்தும் சூழ்நிலைகளைத் தோற்றுவித்தன.

மக்கா வாழ்க்கையின் கடைசி மூன்று நான்கு ஆண்டுகளில், இஸ்லாமியச் சூரியன் தனது ஒளிக்கதிர்களை யத்ரிப் (மதீனா) நகரில் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது! அங்கிருந்த மக்கள் பல்வேறு காரணங்களால் அரபுகளின் பிற குலத்தினரை விட மிக எளிதாக இந்த சத்திய ஒளியை ஏற்றுக் கொண்டிருந்தனர். இறுதியில் நபித்துவத்தின் 12ஆம் ஆண்டில் 'ஹஜ்'ஜின் போது 75 பேர் கொண்ட குழு ஒன்று நபியவர்களை நள்ளிரவில் சந்திதத்து. அக்குழுவினர், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுடன் நபியவர்களுக்கும் அவர்களைப் பின்பற்றுவோருக்கும் தம் நகரத்தில் இடம் அளித்து உதவுவதற்கும் தாங்கள் தயாராய் இருப்பதாய்த் தெரிவித்தார்கள்! அவர்களின் நோக்கம், இஸ்லாத்தில் இணைந்த முஸ்லிம்கள் அரபிகளின் பல்வேறு குலங்களிலும் பகுதியிலும் சிதறி வாழாமல், மதீனா நகருக்கு வந்து அங்குள்ள முஸ்லிம்களுடன் ஒருங்கிணைந்து ஒரு கட்டுக்கோப்பான சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். இவ்வாறு யத்ரிப் நகரம் 'மதீனத்துல் இஸ்லாம்' - இஸ்லாமிய நகரம் எனும் அமைப்பில் தன்னைத் தானே சமர்ப்பித்துக் கொண்டது. நபி (ஸல்) அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு அரபுலகத்தின் முதல் இஸ்லாமியக் கேந்திரத்தை அமைத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு சமர்ப்பித்துக் கொண்டதற்கு என்ன பொருளோ அதை மதீனாவாசிகள் அறியாதிருக்கவில்லை. அதன் தெளிவான பொருள் இதுதான் : அதாவது, ஒரு சின்னஞ்சிறு நகரம், நாடு முழுவதிpலிருந்தும் கிளம்புகின்ற வாள்முனைகளையும் சமூக பொருளாதார பகீஷ்கரிப்புகளையும் எதிர் கொள்ள வேணடிய நிலைக்குத் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டது. மற்றொரு புறம் இந்தச் செயல்முறையின் பொருள் என்ன என்பது மக்காவாசிகளுக்கும் தெரியாமலிருக்கவில்லை. இவ்வாறு, முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமையிலும், வழிகாட்டலிலும் இஸ்லாத்தைப் பின்பற்றுவோர் கட்டுக்கோப்பான முறையில் ஒன்றுபட்டனர். இந்தக் கட்டுக்கோப்பும் ஒற்றுமையும் பழைய அறியாமைக்கால அமைப்புக்குச் சாவு மணியாய் விளங்கின.

மேலும் மதீனா போன்ற ஓர் இடத்தில் இவ்வாறு முஸ்லிம்களின் சக்தி ஒன்று திரள்வதனால் குறைஷிகளுக்கு ஒரு பேராபத்து காத்திருந்தது. அந்த பேராபத்து இது தான் - யமன் நாட்டிலிருந்து சிரியா தேசத்திற்குச் செல்லக்கூடிய வாணிபக் கூட்டங்களின் பிரதானச் சாலை செங்கடலின் கரையோரமாகத்தான் அமைந்திருந்தது. இந்தச் சாலை பாதுகாப்பாய் இருப்பதில்தான் குறைஷிகளுடையவும் இறைவைனுக்கு இணைகற்பிக்கும் ஏனைய பெரும் குலங்களுடையவும் பொருளாதார வாழ்க்கையே அமைந்திருந்தது. அத்தகைய சாலை இப்போது முஸ்லிம்களின் எல்லைக்குள் வந்து விட்டது. அன்றைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் உண்மையில் இந்த வர்த்தக சாலையின் மீதான தமது பிடியை இறுக்கிக் கொள்வதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு எந்த உபாயமும் இருக்கவில்லை.

எனவே, நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றவுடனேயே இந்தப் பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தலானார்கள். இது தொடர்பாக இரு முக்கிய உத்திகளைக் கையாண்டார்கள்.

முதல் உத்தி:- மதீனாவிற்கும் செங்கடலின் கரைக்கும் இடையில் அமைந்த இந்தப் பிரதான சாலைக்கருகில் வசித்துக கொண்டிருந்த சில குலத்தார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார்கள். காரணம், அத்தகைய குலத்தினர் தம்முடன் நட்புறவுக் கொள்ள வேண்டும் அல்லது குறைந்த பட்சம் கோஷ்டி சேராமலாவது இருக்க வேண்டும என்பதற்காக! இந்த முயற்சியில் நபி (ஸல்) அவர்கள் முழுவெற்றி அடைந்தார்கள்.

இரண்டாம் உத்தி:- குறைஷிகளின் வாணிபக் கூட்டங்களை எச்சரித்திட இந்தப் பிரதானச் சாலையை நோக்கித் தொடர்ந்து சிறுசிறு படைகளை அனுப்பத் தொடங்கினார்கள். சில படைகளுடன் தாமே சென்றார்கள். அதே நேரத்தில் மறுபக்கத்திலிருந்து மக்காவாசிகளும் மதீனாவை நோக்கி சில வன்முறைக் கும்பல்களை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

நிலைமை வெகுவாக முற்றிக்கொண்டே வந்தது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஃபான் (கி.பி. 623 பிப்ரவரி அல்லது மார்ச்) மாதத்தில் குறைஷிகளின் மிகப்பெரிய வாணிபக்குழு ஒன்று சிரியா தேசத்திலிருந்து கிளம்பி, மக்கா நோக்கி மதீனாவின் எல்லையை ஒட்டிய இப்பகுதியை அடைந்தது. அக்குழுவிடம் ஏராளமான பொருட்கள் இருந்தன. பாதுகாவலர்கள் குறைவாய் இருந்தனர். முஸ்லிம்களின் வலுமிக்க படை ஏதேனும் அதன்மீது தாக்குதல் நடத்திடுமோ என்னும் அபாயமும் அதிகமாய் இருந்தது. எனவே இக்குழுவின் தலைவர் அபூ ஸுஃப்யான் இந்தப் பகுதியை அடைந்தவுடன் உதவி கேட்பதற்காக ஒரு மனிதரை மக்கா நோக்கி விரைவாக அனுப்பி வைத்தார். அந்த நபரின் தகவலை அடுத்து மக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. குறைஷிகளின் பெரும்பெரும் தலைவர்கள் எல்லாம், போருக்கு ஆயத்தமாகி விட்டார்கள். ஏறத்தாழ ஓராயிரம் போர் வீரர்களில் 600 போர் இரும்புக்கவசம் அணிந்தவர்கள். மேலும் 100 குதிரை வீரர்கள் கொண்ட குதிரைப்படை ஒன்றும் அதில் இருந்தது. இத்துணை முழு பலத்தோடும் ஆரவாரத்தோடும் அவர்கள் போரிடுவதற்குப் புறப்பட்டனர். தமது வாணிபக் கூட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டும வரவேண்டும் என்பது மட்டும் அவர்களின் நோக்கமாய் இருக்கவில்லை. மாறாக, எதிர்வரும் அபாயத்துக்கு ஒரு நிரந்தர முடிவு கட்டிவிட வேண்டும் என்றும் எண்ணத்துடன் அவர்கள் புறப்பட்டிருந்தார்கள். இத்தகைய சூழ்நிலைகளைத் தீர்க்கமாக அறிந்து கொணடிருந்த மாநபி (ஸல்) அவர்கள் தீர்ப்புக்கான நேரம் வந்து விட்டது என்று உணர்ந்து கொண்டார்கள். எனவே மதீனாவுக்கு உள்ளேயும் வெளியேயும் எத்தனையோ பல சிக்கல்கள் இருந்தும் கூட நபியவர்கள் ஒரு தீர்க்;கமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று முடிவு செய்து விட்டார்கள். பிறகு அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் ஒன்று கூட்டி அவர்கள் முன் நிலைமைகள் அனைத்தையும் தெளிவாக விளக்கினார்கள். ஒருபுறம் வடக்கிலிருந்து வாணிபக் கூட்டமும் மறுபுறம் தெற்கிலிருந்து குறைஷிகளின் படையும் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வென்றுவிடுவீர்கள் என்பது இறைவனின் வாக்குறுதி ஆகும். ஆகவே எந்தக் கூட்டத்தை நீங்கள் எதிர்க்கப் போகிறீர்கள் என்பதைக் கூறுங்கள் என்று நபியவர்கள் கேட்டார்கள். இதற்குப் பதிலளிக்கும வகையில் வாணிபக் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தலாம் என பெரும்பாலரின் சார்பாக விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் எண்ணம் வேறொன்றாக இருந்தது. எனவே அவர்கள் அதே கேள்வியையே மீண்டும் கேட்டார்கள். இந்தக் கேள்விக்குப் பதிலாக முஹாஜிர்களில் மிக்தாத் பின் அம்ரு (ரலி) அவர்கள் உணர்ச்சி பொங்க பதில் அளித்தார்கள். (அதற்குப் பிறகு நாயகம் (ஸல்) அவரக்ள மீண்டும் அதே கேள்வியைக் கேட்க அன்ஸார்களைச் சேரந்த ஸஃதுப்னு முஆத் (ரலி) அவர்களும் உணர்ச்சிமிக்க ஒரு சொற்பொழிவை ஆற்றினார். அந்த சொற்பொழிவிலும் அவர் இதே கரு;தையே கூறினார்). அந்த இருவருடைய உரையின் சாரம் இதுதான் :'அல்லாஹ்வின்தூதரே! உங்கள் இறைவன்உங்களுக்கு எந்தத் திசையில் செல்லும்படி கட்டளையிடுகின்றானோ அந்தத் திசையிலேயே சென்று போரிடுங்கள். நாங்கள் உங்களுடன் இருப்போம்.' இந்தச் சொற்பொழிவுகளுக்குப் பின்னர் வாணிபக் குழுவுக்குப் பதிலாக குறைஷிகளின் படையைத்தான் எதிர் கொள்ளச் செல்ல வேண்டும் என்று முடிவாகியது. எனினும் இது ஒரு சாதாரணமான முடிவன்று! இத்தகைய குறுகிய காலகட்டத்திற்குள் போரிடுவதற்காக கிளம்பியவர்களின் எண்ணிக்கையோ முன்நூறை விடச் சிறிது அதிகமாக இருந்தது. மேலும், அவர்களிடம் போதிய போர்த் தளவாடங்களும் இருக்கவில்லை. எனவே அவர்களில் சிலர் உள்ளுக்குள் அஞ்சிக் கொண்டிருந்தனர். தெரிந்து கொண்டே மரணத்திற்கு இரையாகப் போவதாக அவர்கள் உணர்ந்து கொண்டனர். சுயநலவாதிகளான நயவஞ்சகர்கள் இந்த நடவடிக்கையை 'பைத்தியக்காரத்தனம்' என்று வர்ணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களும் உண்மையான இறைநம்பிக்கையாளர்களும் உயிரீந்து போராட வேண்டிய நேரம்இது என்பதை உணர்ந்திருந்தார்கள். எனவே அவர்கள் அல்லாஹ்வின் உதவியையே முழுமையாக நம்பி புற்ப்பட்டு விட்டார்கள். நேராக, குறைஷிகளின் படை வந்து கொண்டிருந்த தென்மேற்குத் திசையை நோக்கி நடைபோட்டார்கள். ஆனால், ஆரமபத்தில் வாணிபக் கூட்டத்தைக் கொள்ளையடிப்பது நோக்கமாயிருந்திருந்தால் வடமேற்குத் திசையை நோக்கி அவர்கள் சென்றிருப்பார்கள்.

ரமளான் 17இல் பத்ரு என்னுமிடத்தில் இரு தரப்பாரும் மோதிக்கொண்டனர். இந்தப் போரில் முஸ்லிம்களின் வாய்மை மிக்க இறைநம்பிக்கை, இறைவனிடமிருந்து பேருதவி என்னும் வெகுமதியைப் பெறுவதில் வெற்றி பெற்றுவிட்டது. அனைத்து வலிமைகளையும பெற்று, அதனால் ஆணவம் கொண்டிருந்த குறைஷிகள் அந்த நிராயுதபாணிகளான தியாக வீரர்களின் கரங்களால் தோல்வியைத் தழுவினர். இந்த தீர்க்கமான வெற்றிக்குப்பின் ஒரு மேற்கத்திய ஆராய்ச்சியாளரின் சொல்லுக்கேற்ப பத்ருப் போருக்கு முன்னர் இஸ்லாம் வெறும் ஒரு மதமாகவும், அரசியலாகவும் திகழ்ந்தது. ஆனால் பத்ருப் போருக்குப் பின்னர் அது ஓர் அரசாளும் மதமாக ஏன் அது ஒரு தனி அரசாகவே மாறிவிட்டது.

பொருளடக்கம்:-
இத்தகைய மகத்தான ஒரு போர் குறித்துத்தான் குர்ஆனின் இந்த அத்தியாத்தில் விமர்சிக்கப் பட்டுள்ளது. இந்த விமர்சனப் பாணி வெறும் உலகாதாய நோக்கம் கொண்ட அரசர்கள் தங்கள் படைகளின் வெற்றிக்குப் பின் செய்யும் விமர்சனப் பாணியை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

முதன்முதலில், அன்றைய சூழலில் ஒழுக்க ரீதியாக முஸ்லிம்களிடம் என்ன குறைகள் எஞ்சியிருந்தனவோ அவை குறித்து இந்த அத்தியாயத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஏனெனில் இனிமேல் முஸ்லிம்கள், அப்பழுக்கற்ற ஒழுக்கமுடையோராகத் திகழ முயலவேண்டும் எனபதற்காக! பின்னர், இந்த வெற்றியில் இறையுதவி எவ்வளவு பெரிய பங்கினை ஆற்றியுள்ளது என்பதும் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தம் வீரத்தையும் துணிவையும பற்றி பூரிப்படைந்து விடாமல் இறைவனின் வலிமையையே நம்பியிருக்க வேண்டும் என்பதற்காகவும், இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய கற்றுக்கொள்ள வெண்டும் என்பதற்காகவுமே இவ்வாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பிறகு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலான இந்த அறப்போரை எந்தத் தார்மீகக் குறிக்கோளுக்காக நடத்த வேண்டும் என்பது இங்கு முஸ்லிம்களுக்கு தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போராட்டத்தில் வெற்றியடையத் தேவையான ஒழுக்கப் பண்புகளும் அவர்களுக்கு உணர்த்தப்பட்டன.

பின்னர், இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்கள், யூதர்கள், இன்னும் போரில் கைதானவர்கள் ஆகிய அனைவர்க்கும் படிப்பினை தரும் பாணியில் உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.
பின்னர், போரில் கிடைத்த பொருள்களைப் பற்றி முஸ்லிம்களுக்கச் சில அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டத்தில் அடியெடுத்து வைத்த பின்பு மிகவும் அவசியமாக தெளிவுபடுத்த வேண்டியிருந்த போர் மற்றும சமாதானம் பற்றிய சட்ட திட்டங்கள் தொடர்பாக சில ஒழுக்க ரீதியிலான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிறகு இஸ்லாமிய அரசின் அரசியலைமப்புச் சட்டத்தினுடைய சில பிரிவுகளும் விளக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக இஸ்லாமிய அரசில் வாழுகின்ற முஸ்லிம் குடிகம்களின் சட்ட அந்தஸ்து இஸ்லாமிய நாட்டிற்கு வெளியே வசிக்கும் முஸ்லிம்களை விட்டு வேறுபடுத்தப்பட்டது.

0 comments:

Post a Comment